மாடம்பாக்கம் மகிமைநிறை தூய லூர்து அன்னை தேவாலயம் கூடுவாஞ்சேரி, தமிழ்நாடு, இந்தியா
மாடம்பாக்கம் மகிமைநிறை தூய லூர்து அன்னை தேவாலயத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் எளிய கட்டிடத்தில் தகரம் வேய்ந்த கூரையில் எளிமையுடன் முதன் முதலில் நற்கருணை பேழையோடு துவங்கிய சிற்றாலயத்தில் காட்சியளிக்கின்றார் நம் தாய் மாடம்பாக்கம் மகிமை நிறை தூய லூர்து அன்னை.
மாடம்பாக்கதில் உள்ள தேவாலயத்தில் அமைந்துள்ள தமக்கான அற்புத சுரூபத்தை, தாமே கொல்கத்தாவில், நம் தேவாலயம் அமையும் முன்னே தேர்ந்தவராக இருகரங்களையும் குவித்தவராய் வரம் அருளி வருகின்றார் நம் தேவத்தாய்.
தேவாலயம் எழுந்த அதே ஆண்டு முதலாக கடந்த 12 ஆண்டுகளாக கடுமையான கொரோனா பெருந்தொற்று சூழலிலும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்தது தடையின்றி அன்னையின் பெருவிழா ஆடம்பர தேர்த்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது எளிய எம் மக்களால்.
ஆம்..!! எளிய மக்களின் பாதுகாவலியாக எங்களின் வளர்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் உறுதிசெய்தவாறு வலம் வருகின்றார் எம் அன்னை தமக்கான தேரை தம் தாமே தேர்ந்தவராக எங்களின் பலம் பொருந்திய பாதுகாவலியாக.
ஆலயத்தின் வலப்புறம் அற்புத நீரூற்றும் அன்னையின் சாட்சியாக பெரும் நீரூற்றாக வற்றா இருப்பாக இருந்து வருகிறது. அன்னையின் ஆண்டு பெருவிழாவில் அன்னைக்கு ஆண்டுதோறும் 30 திற்கும் மேற்பட்ட புடவைகள் காணிக்கையாகவும், ஒவ்வொரு ஆண்டும் தேர்திருவிழாவில் எம்மாடம்பாக்கம் மகிமை நிறை தூய லூர்து அன்னை கிட்டத்தட்ட 1500 பக்தர்கள் புடைசூழ எண்ணற்ற அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தியவாறு இக்கூடுவாஞ்சேரி கிராமங்களின் பாதுகாவலியாக வலம் வருகின்றார்.
சிறுக சிறுக எங்கள் தேவாலயமும் இறை சமூகமும் ஆன்மீகத்தில் வளர்ந்து வரும் சூழலில் எங்கள் குடும்பங்கள் எண்ணிக்கை 150 குடும்பங்களை நெருங்கி வருகின்றது. இதில் மாடம்பாக்கம், குத்தனூர், காவனூர், திருத்தவெளி, மாணிக்கபுரம், நீலமங்கலம், ஒரத்தூர், ஆதனூர் ஆகிய 8 கிராமங்களின் மக்கள் வந்து வழிபடும் தேவாலயமாக நமது ஆலயம் வளர்ச்சியுற்று வருகின்றது.
இத்தகைய நமது இறை நம்பிக்கை நமது மாடம்பாக்கம் மகிமைநிறை தூய லூர்து அன்னையின் அருட்காவலில் வளர்ச்சியுறும் சூழலில் போதிய இடவசதியின்றி மக்கள் வழிபட சிரமப்படும் சூழலில்,
தற்போதைய அன்னையின் பக்தர்களின் வருகையையும், வளர்ச்சியையும், கவனத்துடனும், கருத்துடனும், கண்ணோக்கிய எங்கள் பாசமிகு பங்குதந்தை அருட்தந்தை ஜார்ஜ் அவர்களின் சீரிய முயற்சியோடு எங்கள் கனவை நனவாக்கும் நம்பிக்கை பயணம் துவங்க உள்ளது உங்கள் பேரன்புடன்..!!
ஆம்..!! ஒருபிடி மண்ணை கசக்கும் குயவனைப் போல, ஒரு சிறு காகிதத்தில் வண்ண ஓவியத்திற்கு உயிரூட்டும் ஓவியனைப் போல, ஒரு கரடு முரடான பாறையின் உடலெங்கும் உளியின் பயணத்தால் ஊடுருவிச் செல்லும் ஒப்புயர்வற்ற ஒளி நிறை சிற்பத்தை துவக்கும் உன்னத நிகழ்வு போல எங்கள் எளிய மக்களின் குரல் ஏக்கம் கனவு நீண்ட நெடிய செபங்கள் இன்று எம்மாடம்பாக்கம் மகிமை நிறை தூய லூர்து அன்னையின் எதிர்கால திருத்தலத்தின் அற்புத ஆற்றலும், அதி நிறைந்த வல்லமையும், எல்லையில்லா இரக்கமும், பெருங்கருணையும், நீடித்த ஆரோக்யமும், நிலைத்த பேரமைதியும், ஒவ்வொரு செங்கற்களும் செபத்தை தாங்கும், உன்னத வடிவமைப்புடன் கூடிய நேர்த்திமிகு பேராலயம், எம் அன்னை என்றென்றும் குடியிருக்க, எங்கள் இறைநம்பிக்கையின் விழுமியமாய் துவங்க உள்ள சிற்றடி, உங்கள் ஒவ்வொருவரின் செபங்களும், பிரார்த்தனைகளும், நிச்சயமாக எங்களைத் தாங்கும், எங்களை வழிநடத்தும், எங்களை ஆற்றுப்படுத்தும், எங்களின் நீண்ட நெடிய இந்த கனவுப்பயணத்திற்கான கட்டமைப்பிற்கான வலுசேர்க்கும்.
எங்களுக்காக செபித்துக்கொள்வதோடு நில்லாமல், எங்களோடு ஒவ்வொரு தருணத்திலும் உடனிருக்கவும், உற்சாகமூட்டவும், எங்களை சீரிய வழியில் வழிகாட்டவும், எங்கள் சவால் நிறைந்த ஒவ்வொரு சூழலிலும் உத்வேகம் ஊட்டும் ஒளியாக எங்களில் மிளிரவும் அன்புடன் அழைக்கிறோம்
இறை வல்லமையின் கீற்று, இறைமையின் வழிகாட்டுதல், என்றென்றும் உங்கள் வற்றா இருப்பாகிட இறைமையை பிரார்த்திக்கின்றோம்.
இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக..!!
மாடம்பாக்கம் மகிமைநிறை தூய லூர்து அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..!!
மாடம்பாக்கம் மகிமைநிறை தூய லூர்து அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..!!
மாடம்பாக்கம் மகிமைநிறை தூய லூர்து அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..!!
மரியே வாழ்க..!! மரியே வாழ்க..!! மரியே வாழ்க..!!