தூய லூர்து அன்னையை நோக்கி செபம்

தூய லூர்து அன்னையை நோக்கி செபம்

தூய லூர்து அன்னையே ! உம்மை அம்மா என்றழைத்து மன நிம்மதி அடைகின்றோம். உமது பரிந்துரையால் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அருள் நிறை தாயே, எங்கள் சரணாலயமே. துன்ப வேளையில் புகலிடமே/ நீயே தஞ்சமென்று உம் அருள் நாடி வந்துள்ள எங்களுக்கு இறையாசீரை பெற்றுத் தந்தருளும். எங்களின் அருளே! ஆசீரே அம்மா!! தீராத உடல் வியாதியினால் துன்பப் படுவோருக்கு உடல் நலனையும், மன நோயினால் வருந்துவோருக்கு மன அமைதியை தந்தருளும். வாழ்வில் பிரச்சனைகளில் சிக்கி தவிப்போரை உம் கருணையால் கரை சேர்த்தருளும்,

லூர்து அன்னையே ! எங்கள் மாதாவே!!

எங்களின் கவலைகள் மறைந்திட கடன் தொல்லைகள் நீங்கிட வீடு மனை சொத்து செல்வம் பெருகிட/ சுப காரியங்கள் கூடி வந்திட/ குழந்தை பேறு பெற்று மகிழ்ந்திட/ கல்வி, வேலை வாய்ப்பு குறைவின்றி கிடைத்திட உதவியருளும் அம்மா!

அன்று லூர்து நகரில் காட்சி தந்து உம் பெயர் விளங்கிடச் செய்தாயே! இன்று முதல் மகிமையாய் வீற்றிருக்கும் இம் மாடம்பாக்கத்திலும் புதுமைகள் பல புரிந்து, உம் புகழ் பரவிட தந்தை மகன் தூய ஆவியின் அதிமிக மகிமைக்கு ஒப்புக் கொடுத்து உம் மாசற்ற இதயத்தின் வழியாக இயேசுவின் மகா பரிசுத்த இதயத்திற்கு ஒப்புக் கொடுக்கின்றோம். ஆமென்